" நீ இதற்கு முன்னமேயே தியானிதான் "

 

என் பெயர் அமராவதி ஆந்திர பிரகாஷ். நான் 35 வருடங்களாக சேலத்தில் வசித்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே என் பெற்றோர்களுடன் நானும் பக்தி மார்க்கத்தில் பிரயாணித்து வந்தேன். இந்தியாவிலுள்ள அனைத்து புண்ணிய ஷேத்திரங்களுக்கும் சென்றுள்ளேன். திருவிழாக்கள், ஆன்மிக கூட்டங்கள் இவற்றிலும் கலந்து கொள்வேன்.

 

எனக்கு திருப்பதியில் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு திரு.பத்ரிஜியைப் பற்றியும், அவர் போதிக்கும் தியான முறையைப் பற்றியும் கூறினார்கள். அப்போது அவர்கள் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தியானத்தைப் பற்றி கூறினாலே காதில் வாங்காமல், சினிமாவுக்குச் சென்று விடுவேன். அவர்கள் இல்லாதபோது வீட்டுக்கு வந்து சென்று விடுவேன். இப்படியாக சிறிது காலம் நகர்ந்தது.

 

2006-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள "மைத்ரேய புத்தா பிரமிட்டில்" மே மாதம், "புத்த பூர்ணிமா" விழா நடக்கப்போவதாக அறிந்தேன். எனக்கு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததால் அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகச் செல்ல நினைத்தேன். இதற்கிடையில் சேலத்தில் என் வணிக வளாகத்தை (இரண்டாவது மாடியில் அந்த இடம் காலியாக இருந்தது) வாடகைக்கு கொடுக்க நினைத்திருந்தேன்.

 

புத்த பூர்ணிமாவிற்கு இரண்டு நாள் முன், என் கனவில் இந்த பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்திற்கு இந்த கட்டிடத்தைக் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. இந்த கட்டிடத்தை தியானத்திற்குக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். "இதற்கு சம்மந்தப்பட்ட ஆள் யார்" என்று தேடியபோது, பிரமிட் மாஸ்டர் திரு.சங்கர்லால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் இதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷமாக, "நாங்களும் ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். நாங்கள் புத்த பூர்ணிமாவுக்கு பெங்களூரு போய் வந்தபிறகு உங்களை அணுகுகிறோம்" என்றார்.

 

நானும் புத்த பூர்ணிமாவுக்கு சென்றேன். அங்குள்ள இயற்கை சூழல், பிரமிட் எல்லாம் பார்த்து ரசித்தேன். காலை சிற்றுண்டி உண்டபின் அங்கு கும்பலாக சிலபேர் நின்றிருந்தார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்க்கச் சென்றேன். திரு.பத்ரிஜி அவர்களை அனைவரும் சூழ்ந்திருந்தனர். "நானே வலிய சென்று அவரிடம் பேசமாட்டேன். அவரே என்னைக் கூப்பிட வேண்டும்" என்று எண்ணினேன். சிறிது நேரம் கழித்து திரு.பத்ரிஜி என்னை அருகில் அழைத்தார். நான் அருகில் சென்றவுடன் அவர், "என்ன சுவாமிஜி" என்றார். "நான் தியானி அல்ல, வேடிக்கை பார்ப்பதற்காக வந்தேன்" என்று கூறினேன். அதற்கு "ஏற்கனவே நீங்கள் தியானிதான். அதனால்தான் இங்கு வர முடிந்தது" என்றார் அவர். உடனே அங்கு கூடியிருந்த அனைவரும் கைத்தட்டினர். பின், நான் என்னுடைய கனவைப்பற்றி கூறினேன். அதற்கு அவர் என்னைப் பாராட்டி திறப்பு விழாவிற்கு தேதி கொடுத்து அவரே வந்து திறந்து வைப்பதாக என்னை மேடைக்கு அழைத்துச் சென்று அறிவித்தார். இதுதான் திரு.பத்ரிஜியுடன் என்னுடைய முதல் சந்திப்பு.

 

அன்று முதல் நான் தியானம் செய்யத் தொடங்கினேன். பின்னர், பத்ரிஜி, சேலத்திற்கு வந்து, அந்த கட்டிடத்தை திறந்து வைத்து ‘சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம்’ என்று பெயர் சூட்டினார். ஒருமுறை பத்ரிஜியின் நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் கோயம்புத்தூர் சென்றேன். அங்குள்ள பிரமிட்டில் பத்ரிஜி முன்னிலையில் அனைவரும் தியானம் செய்து கொண்டிருந்தபோது, தியானத்தில் எனக்கு பத்ரிஜி அவர்கள் அமர்நாத்தில், ஒரு கூடாரத்தில் தலையில் குல்லா அணிந்து கொண்டு, படுத்திருப்பது போல் காட்சி அளித்தார். அதை நான் பத்ரிஜியிடம் கூறினேன். அதற்கு அவர், "இதுதான் மூன்றாம் கண் அனுபவம்" என்று அனைவருக்கும் கூறினார். அதற்கு அடுத்தவருடம் பத்ரிஜி “அமர்நாத்" பயணித்தார்.

 

தியானத்திற்கு வருவதற்கு முன் நான் சந்தோஷமாக இருந்தேன். நான் தியானத்திற்கு வந்தபின் அர்த்தமுள்ள சந்தோஷத்தை அனுபவிக்கிறேன். அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் வந்துள்ளது. முதலில் பத்ரிஜியைக் கண்டவுடன், ‘நீ இதற்கு முன்னமேயே தியானிதான்’ என்றார். ஆனாலும் எனக்குள் சந்தேகம் இருந்தது. அதற்கான பதில் ஆந்திர மாநிலம், குண்டூர், அமராவதி தியான சக்ர வைபவத்தில் எனக்குத் தெளிவாக கிடைத்த்து. பத்ரிஜி அவர்கள் கூறினார்கள், ஒரு தியானி தம்பதியர்க்குதான் ஒரு தியானி பிறக்கிறான்” என்று. என் பெற்றோர்கள் ஞானியர்கள். மேலும் என் பெயர் அமராவதி ஆந்திர பிரகாஷ். இந்கு அமராவதிக்கு வந்திருப்பதால் என் சொந்த ஊருக்கு வந்ததைப்போல் உணர்கிறேன். இங்கு இருக்கும் தியானியர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கம் என்று உணர்கிறேன். இப்பொழுது என் சந்தேகம் அறவே நீங்கிவிட்டது. பத்ரிஜி எப்படித்தான் என்னை ‘தியானி’ என்று கண்டுகொண்டாரோ என்பது எனக்கு இப்பொழுதுகூட விந்தையாக இருக்கிறது.

 

 

 

அமராவதி ஆந்திர பிரகாஷ்

சேலம்

Go to top