" அகக்கண்ணின் அனுபவங்கள் "

 

என் பெயர் அமர்நாத். நான் சேலம் மாநகரத்தில் வசித்து வருகிறேன். 2006ம் ஆண்டில் பிரமிட் தியானத்திற்கு என்னை பிரமிட் மாஸ்டர் திருமதி.சுலோச்சனா அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். சாதாரண அமர்நாத் ஆக இருந்த நான் இன்று, "பிரமிட் மாஸ்டர்" அமர்நாத் ஆக உயர்ந்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் தியான அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வது என் கடமை என்று கருதுகிறேன்.

 

நான் சுமார் 8 ஆண்டுகளாக கடுமையான முதுகு வலியால் துன்புற்று வந்தேன். பல டாக்டர்களிடம் சென்று மருத்துவம் பார்த்தும் குணமடையவில்லை. ஆனால் 2006ம் ஆண்டில் 'ஆனாபானசதி' தியானம் பழகி, செய்து வந்ததில் எனது முதுகு வலி முழுமையாகக் குணமடைந்துவிட்டது. அன்றிலிருந்து, இன்றுவரை நான் எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வதில்லை.

 

நான் ஒருநாள் தியானத்தில் அமர்ந்து இருந்தபோது ஒரு முனிவரது தரிசனம் கிடைக்கப் பெற்றேன். அவர் திருமூலர் என்றும், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவர் என்றும், அவர் சீடர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அவரிடம் நான் பேசமுடியுமா என்று கேட்டதற்கு அவரது சீடர்கள், "அவரை நீங்கள் தரிசனம்தான் செய்ய முடியும், பேச முடியாது" என்று தெரிவித்தனர்.

 

நான் மீண்டும் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தபோது, "மெக்கா செல்ல வேண்டும் என்ற எனது அவாவை வெளிப்படுத்தினேன். தியானத்தில் நான் "மெக்கா" சென்று, உள்ளே சமாதியைப் பார்த்தேன். அதன் கீழ் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நம் குரு பத்ரிஜி அவர்கள் என்னை அழைத்துச் சென்று காட்டினார்கள். அதன் அடியில் சிவலிங்கம் இருக்கக் கண்டு அதிசயித்தேன்.

 

ஒருநாள் நான் திருப்பதியில் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, “சுவாமி தரிசனம்" கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். அப்போது பெருமாளைப் போன்று வேட்டி கட்டிய முனிவர் ஒருவர் என் முன் தோன்றி, "நான் ஒரு சித்தர். மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் இங்கு சிலையாக இருக்கிறேன்." என்று கூறி மறைந்தார்.

 

நான் இந்த 'ஆனாபானசதி' தியானம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அநேக ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. நான், இப்போது மிகத் தெளிவுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். அதற்கு நான், குருஜி பிரம்மர்ஷி சுபாஷ் பத்ரிஜி அவர்களுக்கும், எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகிற திருமதி.கிரிஜா ராஜன் - கோவை, அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், குருஜியின் கட்டளைப்படி "தியான உலகம்" அமைய என்னால் முடிந்த அளவு பாடுபட்டும் வருகிறேன்.

 

 

அமர்நாத்

சேலம்

Go to top