" தியானம் செய்யும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் இனிமையான நாள் "

 

அருமையான நண்பர்களே.

 

என் பெயர் தீப்தி. நான் B.Sc Final Year Nutrition & Dietetics படித்துக் கொண்டு இருக்கிறேன். நான் 2006ல் தியானம் செய்யத் தொடங்கினேன். அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து 2 மணி நேரம் தியானம் செய்கிறேன்.

 

நான் +2 படித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் என் உடல்நிலை சரி இல்லாமல் போனது. மிகுந்த வயிற்று வலியால் அவதிப்பட்டேன். நான் பள்ளிக்குச் செல்லும்போது கடையில் உள்ள சிற்றுண்டி உணவுகளை சாப்பிட்டதால் வயிற்றில் விஷமேறிவிட்டது. டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஆனால் அதற்குத் தேவையான இரத்தம் இல்லாததால், இரத்தம் உற்பத்தி ஆவதற்கு மருந்துகள் உட்கொண்டு உடம்பை அலட்டி கொள்ளலாமல் தூசி, அழுக்கு போன்றவற்றிலிருந்து விலகி 3 மாதங்கள் ஓய்வு எடுக்கச் சொன்னார். பரிட்ச்சைக்கும் செல்ல வேண்டாம் என்றார், 2 வாரங்கள் கழித்து வருமாறு டாக்டர் கூறினார்.

 

அப்போது அம்மாவின் ஆலோசனைபடி திருமதி. சொர்ணமாலா பத்ரி அவர்களை பார்த்தோம். அப்போது அவர்கள் தியானம் எப்படி செய்ய வேண்டும் என்று முறையாக கற்றுக்கொடுத்து 41 நாட்கள் தினமும் 3 மணி நேரம் தியானம் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறு செய்ய, முதலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், அம்மாவின் வற்புறுத்தல் மூலமாக நான் 2 வாரங்கள் தியானம் செய்தேன். பின்னர் டாக்டரிடம் சென்றோம். டாக்டர் என்னை பரிசோதித்து விட்டு உடம்பில் இரத்தத்தின் அளவு 6லிருந்து 11வரை உயர்ந்து இருக்கிறது என்று டாக்டர் ஆச்சரியப்பட்டு, எனக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை சிறிது ஓய்வு எடுத்தால் போதும் என்று கூறி விட்டார். இந்த 2 வாரங்களில் அடைந்த தியான அனுபவங்கள் மற்றும் என் உடல் நிலையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து நானே உற்சாகமாக தினமும் 3 மணி நேரம் தியானம் செய்து பின் ஒய்வு எடுத்துக் கொண்டு வந்தேன்.

 

ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் சென்றேன். அவர் பரிசோதித்து விட்டு "நீ நன்றாக உள்ளாய். இனி நீ பரிட்ச்சைக்கு செல்லலாம்" என்று கூறினார். தேர்வுக்குப் படித்தல், மற்ற நேரத்தில் தியானம், ஒய்வு என்று இருந்தேன். அதிக நேரம் தியானம் செய்ததால் எனக்கு கஷ்டம் இல்லாமல் பரிட்ச்சை எழுதினேன். எல்லோரையும்போல் நானும் Resultக்கு காத்துக்கொண்டு இருந்தேன். எப்போதும் தியானத்தை விடவில்லை. அந்தப் பரீட்ச்சையில் நான் 65% மதிப்பெண்களை எடுத்தேன்.

 

என்னை டாக்டர், பரீட்ச்சையே எழுதவேண்டாம் என்றார், பிறகு அவர் எழுதச் சொன்னதும், நான் பரீட்ச்சைக்கு முந்தைய தினம் படித்து 65% மதிப்பெண்கள் பெற்றதும், எனக்கும், என் குடும்பத்திற்கும் மற்றும் என்னைச் சுற்றி உள்ள அனைவருக்கும் ஆச்சிரியத்தைத்தந்தது. இவை எல்லாம் 2006ல் நடந்தன.

 

உடல்நிலை சரியில்லாதபோதும்கூட நான் செய்த தியானத்தால்தான் ஆனந்தமும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெற்றேன். உடல் நன்றாக இருக்கும் போது தியானம் செய்தால் இன்னும் எவ்வளவு சக்தியை பெறலாம் என்று சிந்தித்தேன் அன்றைய தினத்திலிருந்து, தினமும் 2 மணி நேரம் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். அதன்பிறகு எனக்கு படிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. என்னுடைய அம்மா, அப்பா எது சொன்னாலும் என்னுடைய நலனைக்கருதி நன்மையைத்தான் சொல்வார்கள் என்ற எண்ணம் உருவாகி, அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

 

எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் அமைதியாக தியானத்தில் அமர்வேன். நான் தியானத்தில் இருக்கும்போது அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு குருமார்களிடம் இருந்து எனக்குக் கிடைத்துவிடும். நான் அதன்படி தீர்வு காண்பேன். அதனால், இப்பொழுது என் படிப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும், எந்த வித கவலையோ பயமோ இல்லை. என்னுடைய அம்மா 2004ல் இருந்து தியானம் செய்கிறார்கள். அதனால் எனக்குக் கிடைக்கும் தியான அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். ஆன்மிகமான பலவற்றை அவர்களிட மிருந்தும் தெரிந்து கொள்வேன்.

 

நான் தெரிந்து கொண்டது என்ன வென்றால், ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தியானம் செய்தால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அவர்களே சரி செய்து கொள்ள முடியும் என்பதே. அது மட்டுமில்லை குடும்பத்தில் உள்ள அனைவரும் தியானம் செய்து சந்தோஷமாக வாழலாம். ஆகையால் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தீப்தி

சென்னை

Go to top