" சைவ உணவால் மட்டுமே பூரண ஆரோக்யம் கிடைக்கும் "

 

 

தியான குருவிற்கு வணக்கம்.

 

ஆன்ம குரு சுவாசத்திற்கு வணக்கம்.

 

எல்லாவற்றிற்கும் ஆதாரமான விஸ்வசக்திக்கு வணக்கம்.

 

என்னுடைய பெயர் திருமதி. டாக்டர் தெய்வம் கோவிந்தசாமி. நான் திருச்சிராப்பள்ளியில் வசிக்கிறேன். என்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவர்களே. அனைவரும் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள்.

 

என் தந்தையார் ஆன்மிகம் கலந்த காந்தியவாதியாவார். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் அழகிய நீர் ஓடையின் அருகிலே ஒரு சிற்கிய பிள்ளையார் கோயிலைக் கட்டி தினமும் பூஜைகள் செய்வதின் மூலமாக எங்களையும் பக்தி மார்க்கத்துடன்யே வளர்த்தார்.

 

என்னிடம் சிறு வயது முதலே ஆன்மிகத் தேடல் மிகுதியாக இருந்தது. அதன் காரணமாக இந்து, கிறிஸ்துவ மற்றும் முகமதியர்களின் புனித நூலகள், இதிகாசங்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கல் போன்றவர்களின் விரிவுரை அறிவுரைகள், ஸ்தல வரலாறுகள் போன்றவற்றைப் படித்தேன். நிறைய கோவில்களுக்குச் சென்றுள்ளேன். எனக்கு மிகவும் பிடித்தமான கடவுள் திருப்பதி ஏழூமலையானும், ஸ்ரீரங்கம் அரங்கநாதரும் ஆவர். இவர்களின் அருளால் எனக்கு நிறைவான வாழ்க்கையே கிடைத்தது. ஆனாலும் என் ஆன்மிகத் தேடலுக்கான விடை மட்டும் கிடைக்கவேயில்லை. நமக்கு அப்பாற்பட்ட ஒர் பெரிய சக்தி நம்மை வழி நடத்துகிறது என்று என் மனம் கூறிகொண்டேயிருக்கும்.

 

அதன் பின்னர் படிப்பு, திருமணம், குழந்தைகள், தொழில் என்று என் வாழ்க்கை வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. பேரப்பிள்ளைகள் பிறந்த பின்னரும் ஆன்மிகச் சிந்தனை அதிகமாகியது. என்னுள் எழுந்த கேள்வி என்னவென்றால், பிறக்கின்றோம், வளர்கின்றோம், திருமணம், பிள்ளைப்பேற்று, தாத்தா, பாட்டியாகி பின்னர் இறக்கின்றோம். இதுதானே வழிவழியாக நடக்கின்றது. இதுதானா வாழ்வின் லட்சியம், இதற்காகவா இம்மனிதப் பிறவி? இதற்கு முடிவு இருக்கின்றதா? இல்லையா? என்பதே. இதற்கான விடை மட்டும் எனக்குக் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையில் நான் கை, கால்களில் வலி, உறக்கமின்மை, பித்தப்பையில் கல் (Gallbladder stone) போன்ற பிரச்சனைகளால் அவதியுற்றேன். சிறிது நேரம் கூட நிற்கவோ, நடக்கவோ முடியாது. (ஆனால் 'ஆனாபானசதி' தியானத்திற்கு பின்னர் 'திருவண்ணாமலை கிரிவலமே' சென்று வந்துவிட்டேன் என்பது வேறு விஷயம்)

 

மருத்துவ முறைகள் நிரந்தர பலனளிக்கவில்லை. வயதானால் இது போன்றவை சகஜமானதுதான் என அறிவுறுத்தப்பட்டேன். என் மகன் பித்தப்பை கல்லுக்கு அறுசை சிகிச்சை செய்யுமாறு கூறினான். எனக்கு அதில் உடன்பாடில்லை.

 

இந்நிலையில் நான் 'வாழ்க வளமுடன்', 'வேதாத்ரி மகரிஷியின்' யோகா, தியானம் போன்றவைகளைக் கற்றேன், அதிலும் ஒரு பிடிப்பு ஏற்படவில்லை.

 

பின்னர் ஒருநாள் என் மகள் திருமதி. தேவி பாலசிங்கம், தான் சென்னையில் கேள்விபட்டு அறிந்த 'ஆனாபானசதி' தியானம் மற்றும் 'பிரமிட் ஸ்பிரிட்சுவல் சொசைட்டியின்' செயல்பாடுகளைப் பற்றியும், தியானமுறை, ஆசான்களின் அனுபவங்கள் போன்றவற்றையும் தொலைபேசியிலியே எங்களுக்கு கூறி அனைவரையும் தியனம் செய்யுமாறு கூறினாள்.

 

என்னுடைய சுவாச்த்தினை கவனிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே என்னுள் ஏற்பட்ட மாற்றங்களினால் மிகவும் ஆர்வத்துடன் தியானப் பயிற்சியை மேற்கொண்டேன். அதன் பிறகு அதன்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் சென்னைக்கு வந்து, என் மகள் வீட்டில் இருந்தபடியே ஜுன் 1, 2009 முதல் ஜுன் 10, 2009 வரை நெற்குன்றத்திலுள்ள பிரமிட் ஆசான் திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்களின் பிரமிடினுள் இருவேளை தியானம், ஆலோசனைகள், வகுப்புகள், புத்தகங்கள் படிப்பது என என் நாட்கள் பயனுள்ளவாறு கழிந்தன.

 

அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் தியானம் செய்கிறேன். உடல் வலிகள் பறந்தே போய்விட்டன. நன்றாக உறங்குகின்றேன். மாதம் ஒருமுறை திரவ உணவு ஊசி மூலம் (saline) ஏற்றுவதும், ரூ.600/- பெருமானமுள்ள வைட்டமின் மருந்துகளை மாதாந்திர மளிகை செலவில் வாங்குவதும் அடியோடு நின்றுவிட்டன. தினமும் இரவு தேன் கலந்த பால் ஒரு டம்ளர் குடித்து, வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்றால் அசைவ உணவை உண்ண வேண்டும் என்ற மனோ நிலை மாறி, சைவ உணவால் மட்டுமே பூரண ஆரோக்யம், மன, உடல் வலிமை, நிம்மதி, சந்தோஷம் போன்றவை பெறலாம் என்பதினை உணர்ந்து, வீட்டிலுள்ள புது பாத்திரங்கள் வாங்கி சைவ உணவு சமைக்க ஆரம்பித்தேன். வீட்டில் (2'x2') பிரமிடும் வாங்கி வைத்தேன்.

 

எனக்கிருந்த 'பித்தப்பைக் கல்லால்' கடுமையான உணவுக் கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க நேர்ந்தது. பால், நெய், தயிர், எண்ணை, ஐஸ்கிரீம் இவற்றை அறவே ஒதுக்க வேண்டும். ஆரம்பத்தில் 'ஸ்கேன்' செய்தபொழுது அக்கல்லின் வளர்ச்சி 6.8 மிமீ அளவு இருந்தது. ஆனால் இன்று நம் குருஜி 'பிரம்மர்ஷி பத்ரிஜி' அவர்களின் நல்லெண்ணத்தின் காரணமாக அவர் பிரச்சாரம் செய்யும் 'ஆனாபானசதி' தியானம் மூலமாக என் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கித் தற்பொழுது 15.06.2012ல் எடுத்த ஸ்கேனில் கல்லின் அளவு 1.5 மிமீ என்றும் முன்பிருந்த Fatty Liver என்பது Normal Liver என்றும் ‘ரிபோர்ட்’ வந்துள்ளன. அன்றோ எனக்கு மிகவும் சந்தோஷம், ஸ்கேன் செய்த டாக்டரிடம், "நான் மருந்துகளின்றி தியானம் மூலம்தான் இக்கல் வெகுவாகக் குறைந்தது" என்றேன். அவர்களும் ஆச்சரியத்துடன், "எங்களுக்கும் கற்றுத் தாருங்கள்" எனக் கூறி அங்குள்ள நர்சுகள், வார்ட்பாய் போன்றவர்களையும் அழைத்து அனைவருக்கும் தியானத்தினை கூறச் செய்தார்கள். மிகவும் எளிதாக உள்ளதாகவும், தங்கள் குடும்பத்தினருக்கும் கற்றுக் கொடுக்கப் போகவதாகவும் கூறினார்கள். அதன்பிறகு ஸ்கேன் செய்யவில்லை. இன்று பூரணமாக கரைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் எவ்வகை உணவு கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து சைவ உணவையும் உண்கிறேன். எந்தவித உடல் கோளாறும் இல்லை.

 

நான் தியானம் செய்யும்பொழுது தன்னிச்சையின்றி தானாகவே உடற்பயிற்சிகள் ஏற்படும் (காயானுபாசனா). சாதாரணமாக உடற்பயிற்சியின்போது களைப்பு ஏற்படும், கால்களைத் தூக்கவே முடியாது, ஆனால் தியானத்தில் தன்னிச்சையின்றி, சுறுசுறுப்பாகவும், ஆர்வமுடனும் ஒவ்வொரு பகுதிக்கும் பயிற்சி கிடைக்கின்றது.

 

தற்பொழுது எவ்வித மருந்துகள், டாக்டர்களின் ஆலோசனைகள் எதுவுமின்றி பூரண ஆரோக்கியத்துடன், சோர்வின்றி, ஆனந்தமாக இருக்கின்றேன். 'Take it Easy' 'எல்லாமே சுலபம்' என்று எல்லாவற்றையும் ஏற்கும் மனப்பக்குவம் தானாகவே வாய்த்து விட்டது.

 

நான், என் ஆன்மிகத் தேடல் மற்றும் ஓய்வு எடுக்க வேண்டியதின் அவசியத்தால் மருத்துவ தொழிலை செய்வதில்லை. இருந்தாலும் என்னிடம் வரும் என்னுடைய பழைய நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் 'தியானம் செய்யுங்கள், நோயும் வராது, மருந்தும் வேண்டாம், டாக்டரும் வேண்டாம்' எனக்கூறி வர்கிறேன். உறவினர்கள், நண்பர்கள், வங்கி, பள்ளி என்று என்னால் முடிந்த அளவு அனைவருக்கும் தியானம் கற்றுத் தருகிறேன். 'தியான வித்வான் மணி' திருமதி. கிரிஜா ராஜன் மற்று திரு.ராஜன் தம்பதியரின் நல்லுதவியால் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் போன்ற இடங்களில் தியானப் பிரச்சாரம் மேற்கொண்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

 

என்னுடைய நெடுநாளைய ஆன்மிகத்தேடல் மற்றும் வாழ்வியல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. அது என்னவென்றால், "நாம் இதுபோன்ற எண்ணற்ற பிறாவிகளை எடுத்து துன்புற வேண்டிய அவசியமே கிடையாது. நாம் நினைத்தால் பிறவிகளற்று இருக்கலாம் என வெகு எளிதாக குருஜி கற்றுத் தந்த தியானம் பறை சாற்றுகிறது".

 

குருஜி வருடக் கடைசியில் நடத்தும் தியான யக்ஞங்கள் பெருமதிப்புடையவை. நான் இம்முறைதான் 'அமராவதி தியான சக்ராவிற்கு' சென்றேன். என் தாயின் வீட்டில், திருமணத்திற்கு முன்னர் என் சகோதர சகோதரிகளுடன் கவலையற்று இருந்தது போன்று இருந்தது. 3 வேளை இலவசமாக உணவு, காதுக்கினிய சங்கீதங்கள், மனதுக்கினிய தியானம், புத்தரின் அமராவதியில் அதிகாலை 4 மணி தியானத்தில் பங்கு பெறுவதற்கு நடந்து சென்றது இவையனைத்தும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் இது போன்ற அரிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தியானம் செய்தும் "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது போல் தியானத்தை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். 'தியான சக்ராவின்போது' கிடைத்த சக்தி அளவிட முடியாது.

 

என் வாழ்விலும், ஆன்மிகத்திலும், பொதுவாழ்விலும் சுதந்திரமாக முன்னேற எனக்குப் பெரும் ஒத்துழைப்பு தரும் என் கணவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

தியான குரு பத்ரிஜிக்கு கோடி நன்றிகள்.

 

ஆன்ம குரு சுவாத்திற்கு கோடி நன்றிகள்.

 

எல்லாவற்றிற்கும் ஆதாரமான விஸ்வசக்திக்கு கோடி நன்றிகள்.

 

 

திருமதி. டாக்டர். தெய்வம் கோவிந்தசாமி

திருச்சி

Go to top