" இருண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு ஒளி - தியானம் "

 

நான் நெற்குன்றத்தில் தியானப் பயிற்சி மையம் அமைத்து, அங்கு தியானம் செய்ய வசதியும் பயிற்சியும் அளித்து கொண்டு வருகிறேன். இந்த ஆனாபானசதி தியானத்தால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

என் பெயர் பிரசாந்தி சந்திரசேகர். நான் எத்தனையோ ஆரோக்கிய குறைபாடுகளால், அவதியுற்றிருந்தேன். தியானத்தின் பலன் தேட தியானத்தில் 21-1-2006 அன்று அடியெடுத்து வைத்தேன். அதற்கு முன் நான் பல நோய்களுக்கு ஆளாகி பல துன்பங்களை அனுபவித்து வந்தேன். செர்வைகல் 'ஸ்பான்டைலைட்டிஸ்' நோயால் வலது கையில் ஒரு சின்ன பையைக் கூட தூக்க முடியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி சளி, இருமல், தொண்டை வலி வரும். சின்ன மாற்றங்களைக் கூட என் உடலால் தாங்க முடியாது.

 

'ஹார்மோன் இம்பேலன்ஸ்', டான்சில், வயிற்றுவலி இன்னும் எவ்வளவோ சின்ன பிரச்சனைகளுக்குக் கூட பயம். என்ன நடக்கப் போகிறதோ என்று பயம். மொத்தத்தில் உடலும், மனமும் பலவீனமாகி மனஅழுத்தம் காரணமாக 'தற்கொலை' என்ற எண்ணம் வந்து, மறைந்தது. அப்படி செய்தால், குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கவலையும் வந்தது. நீண்ட நாட்களாக, அமைதியாகத் தூங்கியதுகூட இல்லை. மருத்துவர்கள் தூக்கத்திற்கு மருந்து கொடுத்தார்கள். கழுத்து வலிக்கு காலர், பயிற்சிகள், நரம்புக்கு தோளில் 'ஸ்டீராய்டு' ஊசி கொடுத்தார்கள். என் வாழ்க்கை நரகமாகி விட்டது. இந்த நிலையில் தியானம் பற்றிய உண்மை எனக்கு தெரியவந்தது. இந்த தியானம் என் வாழ்க்கையை முழுமையாக மாற்றி விட்டது.

 

நான் தினமும் அதிகாலை 5 மணிக்கு தியான மையத்திற்கு சென்று விடுவேன். தினமும் 2 மணி நேரம் அமைதியாக தியானம் செய்வது, ஆன்மிக புத்தகங்கள் படிப்பது, ஆசான்களின் அறிவுரைகளை ஏற்பது, முடிந்தவரை மற்றவர்களுக்கு தியானம் கற்பிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டேன். அதற்குள் என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதை அறிந்தேன்.

 

வாழ்க்கையை நம் கைக்குள் எடுத்துக் கொண்டு நாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ள தியானம் எவ்வாறு உதவி செய்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். எனக்கு அறிவு, மனமுதிர்ச்சி, பரந்த மனப்பான்மை போன்ற நற்குணங்கள் வளர்ந்தது. என்னுள் மனவலிமை பிறந்துள்ளதை அறிந்தேன். சிந்திக்கும் திறன் வளர்ந்தது. இதற்கு முன்னர் பிடிக்காதவர்களைக் கண்டால் கோபம் வரும். குழந்தைகளோடு இணக்கமாக இருக்க முடியாமல் வருத்தம் ஏற்படும். ஆனால் தியானம் செய்ய ஆரம்பித்தபின் இவற்றிலெல்லாம் மாற்றம் நன்றாகத் தெரிந்தது. இன்முகத்துடன், அன்பாகப் பேசும் சுபாவம் ஏற்பட்டது.

 

இப்போழுது, ஒரு வருடமாக என் வீட்டின் மாடியில் 'பிரமிட்' கட்டி, அதனுள் 30 பேர் தியானம் செய்யும் அளவில், எங்கள் தியான மையத்தை நடத்தி வருகிறோம். தினமும் பலருக்கும் தியானம் கற்பித்து வருகிறேன். பெளர்ணமியில் எங்களால் அழைக்கப்படும் பிரமிட் ஆசான்களின் வகுப்பில், அவரவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்பட்டு, தத்தம் வாழ்க்கையை நன்னெறிப்படுத்திக் கொள்கின்றனர். உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்க தியானம் ஒன்றே வழி என தெரிந்து கொண்டுள்ளனர். பிரமிட்டுக்கு வந்து தியானம் செய்பவர்களுக்கு மிக நல்ல பலன் தெரிகிறது. சிலர் 2x2 பிரமிட்களை வாங்கி அவர்கள் வீட்டில் வைத்து, தியானம் செய்து, அதிக பலன்களைப் பெறுகிறார்கள்.

 

நானும் என் கணவரும், நான்கு வருடங்களாக மருந்து எடுத்துகொள்வது இல்லை. குழந்தைகளுக்காக எப்பொழுதாவது மருத்துவர்களிடம் செல்கிறோம். என் வாழ்க்கை இவ்வளவு ஆனந்தமாகவும், எளிதாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு நான் செய்யும் தியானமே காரணம். எனக்கு இப்பிறவி கொடுத்தது என் பெற்றோர். என் வாழ்க்கையை வரமாக கொடுத்த என் அம்மா, அப்பா, குரு, தெய்வமான பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கு ஆயிரம் கோடி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

 

எனக்கு ஒவ்வொரு முறையும் தியானத்தில் உறுதுணையாக இருந்த திருமதி.சுவர்ணஸ்ரீ, பல வகுப்புகள் நடத்திக் கொடுத்த திரு.ஜெகதீஷ் மாஸ்டர் மற்றும் பலபேருக்கு நன்மை செய்கின்ற சென்னையில் தியான மையம் ஆரம்பித்த திரு.மதுசூதனன் அவர்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய நன்றி. இருண்டிருந்த இந்த வாழ்க்கைக்குள்ளே ஒளி என தியானம் வந்து எங்களுக்கு சரியான வழியைக்காட்டியது.

 

'தியான ஜகத்'துக்காக பாடுபடுகின்ற மாஸ்டர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் இன்னும் தியானப்பிரச்சாரம் செய்து, ஸ்ரீராமருக்கு அணில் போல தியான ஜகத்துக்காக என்னாலான உதவிகளைச் செய்ய விழைகிறேன். ஆன்மிக புத்தகங்கள் மூலம், சிறு வயதிலிருந்து, இருக்கின்ற சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன. நான் 2009ம் வருடம் டிசம்பரில் 25 முதல் 31ம் நாள் வரை ஸ்ரீசைலத்தில் நடந்த தியான மகா யக்னத்தில் கலந்து கொண்டேன். அந்த ஏழு நாட்களும் மறக்கமுடியாத அற்புதமான தெய்வீக நாட்களாக இருந்தன. பத்ரிஜியின் தகவல்கள், ஆசான்களின் அனுபவங்கள், சங்கீதம், நாட்டியம் அனைத்தும் மகிழ்ச்சியாக, இனிமையாக பயனுள்ளதாக அமைந்திருந்தது.

 

 

திருமதி.பிரசாந்தி சந்திரசேகர்

சென்னை

Go to top