" விடுதலை பெற்ற நாள் - நான் 'ஆனாபானாசதி பிரமிட் தியானம்'  ஆரம்பித்த நன்னாள் "

 

 

என் பெயர் பாரதி சுதாகர். நான், ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள புங்கனூர் எனும் ஊரில் 1963ம் வருடம் ஜுலை மாதம் 6ம் தேதி பிறந்தேன். என் தாயார் திருமதி. முனிலக்ஷ்மி, தந்தையார் திரு.ஸ்ரீராமுலு. எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.

 

நாங்கள் அவ்வப்போது பாட்டி ஊரான 'கீழப்பட்ளா' எனும் கிராமத்திற்கு செல்வது வழக்கம். அந்த ஊரில் மின்சாரம் இருக்காது. எங்கள் தாத்தா மாலைப் பொழுதில் 'லாந்தர்' வெளிச்சத்தில் அனைவருக்கும் இராமாயணம், மகாபாரதம் சொல்வார். எங்கள் பாட்டி இரவு உணவின் பொழுது நீதிக்கதைகள், இராஜாக்களின் கதைகளைக் கூறுவார்.

 

எங்களது குடும்பம் கூட்டுக் குடும்பம். என் தந்தையின் சகோதரர்கள் ஒன்பது பேர். நாங்கள் அனைவரும் பண்டிகை மற்றும் விழா நாட்களில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவோம். எனக்கு என் தாயை மிகவும் பிடிக்கும், என் தாய், எனக்கு, எல்லோருடனும் அன்புடன் பழகக் கற்றுக் கொடுத்தார். நான் என் சகோதர, சகோதரிகளுடன் மிகுந்த பாசத்துடன் இருப்பேன்.

 

என் தந்தை வியாபார நிமித்தமாக 1972ம் வருடம் பெங்களூருக்கு வர நேர்ந்தது. நான் புங்கனூரில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். கன்னட மொழி எனக்கு தெரியாத மொழியானதால் இங்கு மறுபடியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்க நேர்ந்தது. எனக்கு படிப்பின் மீது பெரிய நாட்டம் இல்லை. அதனால் பத்தாவது வரை படித்து, அதன் பின் யோகாசனம், வீணை, தையல், தட்டெழுத்து போன்ற பல வகுப்புகளுக்கும் சென்றேன். ஆனால் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வீட்டில் அம்மா சொல்லும் வேலையைவிட, வெளியே சென்று செய்யும் வேலைகள் மிகவும் பிடித்திருந்தன.

 

நான் சிறு வயதிலிருந்தே தைரியமாகவும், தனிமையிலும், வெளியில் செல்வது வழக்கம். புதியவர்களிடம், எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே பழகுவேன், பேசுவேன்.

 

சிறுவயதில் இருந்து "பகவத்கீதை" என்றால் மிகுந்த பிரியம். திரு.கண்டசாலா குரலில் ஒலிக்கும் பகவத் கீதையை கேட்கும்பொழுது, அதன் அர்த்தங்கள் அந்த வயதில் புரியாவிட்டாலும், மனதிற்கு அமைதியாக இருக்கும். ஆன்மிகப் பாடல்கள், வேதாந்த சாரமுள்ள பாடல்கள் இவற்றை ரசித்துக் கேட்பேன். ஆனால், பூஜை, விரதங்கள் மேல் ஆர்வம் இல்லை. கடவுள்களில் சிவபெருமான் என்றால் மிகவும் பிடிக்கும். சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல், விழித்துக் கொண்டிருப்பேன்.

 

எனக்கு 1983ல் சித்தூரில் திரு.சுதாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்கள் குடும்பமும் கூட்டுக் குடும்பமே. எனக்கு இரண்டு குழந்தைகள். மகன் செல்வன்.ஹரிஸ்நாக், மகள் செல்வி.சிரிஷா. எனது கணவர் 'பேப்பர்' வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அது சரிவர இயங்காததால் 1992ம் வருடம் சேலத்திற்கு வந்தோம். இங்கு என் சித்தப்பா, திரு.ஆந்திர பிரகாஷ் அவர்களின் ஜவுளிக் கடையில், மேனேஜராகப் பணிபுரிகிறார். என் கணவர் வந்த புதிதில் எனக்கு ஊர் புதிது, மொழி தெரியாது. எங்கள் பக்கத்து வீட்டிற்கு ஒரு பிராமண குடும்பம் குடிவந்தது. அவர்களிடம் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அக்குடும்பத் தலைவி பெயர்.திருமதி மல்லிகா அவர்களிடம் நானும் குழந்தைகளும் 'தமிழ்' கற்றுக் கொண்டோம். அவரிடம் கற்றுக் கொண்ட தமிழ், இப்பொழுது நான் செய்யும் வியாபாரத்திற்கும், தியான பிரச்சாரத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. திருமதி.மல்லிகா எந்த விஷயமானாலும் நன்கு புரியும்படி கூறுவார். அவர்களை நான், தாய், தந்தை, குரு, தெய்வமாகக் காண்கிறேன். இந்த நட்பு இப்பிறவியின் பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் இது மட்டுமின்றி பல ஆன்மிக விஷயங்களையும் கற்றுக் கொடுத்தார்.

 

 

வாழ்க்கை மற்றும் தியான அனுபவங்கள்:

நோயின் பிடியில்

 

எனக்கு 1984ம் வருடத்தில் இருந்து 1994ம் வருடத்திற்குள் ஐந்து அறுவை சிகிச்சைகள் நடந்தன. எப்பொழுதும் மருத்துவர்கள், மருந்துகள் என வாழ்க்கை கசப்பாக இருந்தது. என் கணவரின் வருமானம் முழுவதும் இதற்கே செலவாகிக் கொண்டிருந்தது, இப்படி ஆரோக்கியம் இல்லாமல், பூமிக்கு பாரமாக நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்தபொழுதெல்லாம் என் குடும்பத்தினரின் அன்பும், பரிவும், என்னை வாழ வைத்தது. அதன் விளைவாக விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் எனத் தவித்தேன்.

 

ஆன்மிகத் தேடல் ஆரம்பம்

 

என் மாமியார் என் கையில் ஜபமாலை கொடுத்து, "ஒம் நம சிவாய" என்று ஜபம் செய்யச் சொன்னார். என் சினேகிதி மல்லிகா, "தியானம் செய், ஆரோக்கியம் பெறுவாய்" என்று கூறினார். இதைக் கேட்டு 1998ம் வருடம் "பிரம்மகுமாரி ராஜயோகா"விற்குச் சென்றேன். அங்கு அவர்கள், "நான் என்பது இந்த உடல் அல்ல, ஆன்மா" என்ற தத்துவத்தை போதித்தனர். அங்கு இரண்டு வருடங்கள் சென்றபோதும் தியானம் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆரோக்கியம் பெறவில்லை. 2000மாவது வருடத்தில், 'சித்த சமாதி யோகாவின்' (SSY)12 நாட்கள் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு, யோகாசனங்கள், சூரிய நமஸ்காரம், பச்சை காய்கறிகள் (Raw food) சாப்பிடுவது, 15 நிமிடங்கள் தியானம் செய்வது, போன்றவற்றைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்தேன். இங்கேயும், 'தியானம்' என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை.

 

 

தியானத்தினால் முக்தி

 

ஸ்ரீ ஸ்ரீ வித்யா பிரகாஷா நந்தகிரி சுவாமிகள் ஆன்மிக தத்துவம், 'மானஸ போதா' போன்ற ஆன்மிக தத்துவத்தை திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல்கள் வாயிலாக மிகவும் விரும்பிக் கேட்பேன். இதிலிருந்து, "இந்த உலகம் ஒரு நாடக மேடை, இதில் நாம் எல்லோரும் நடிக்க வந்துள்ளோம். பொருள் மேல் ஆசையை வளர்த்துக் கொள்ளக் கூடாது, இவையெல்லாம் அழியக் கூடியவை, எதுவும் நிரந்தரமல்ல" என அறிந்து கொண்டேன். தியானத்தினால் நாம் முக்தியை அடைய முடியும் என அறிந்து கொண்டேன். ஆயினும், எத்தனை தியான மன்றங்களுக்குச் சென்றாலும் தியானம் என்றால் என்னவென்று புரியவில்லை, சரியான தியானத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பரமஹம்ஸா யோகானந்தாவின், "ஒரு யோகியின் சுய சரிதம்" என்னும் புத்தகம் படித்தேன். அதை படிக்கும்பொழுது, என்னை நான் மறந்துவிட்டேன். அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு நான் நேரில் சென்று பார்த்த உணர்வும், மாஸ்டர் யோகானந்தா என்னிடம் பேசுவது போலவும் இருந்தது. மஹா அவதார் பாபாஜி, ஸ்ரீ லாஹிரி மஹாசயர், ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி மகராஜ், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் இவர்களின் பெயர்கள் மற்றும் ரூபங்கள் என் மனதில் நிலைத்துவிட்டன. இந்த புத்தகம் என் வாழ்வில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

 

 

விடுதலை பெற்ற நாள்

 

நம் நாட்டிற்கு ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் கிடைத்தது போல், 2004ம் வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் என் பொளதிக இன்னல்களில் இருந்து விடுதலைக்கான ஆரம்பநாள். ஆனந்தமான ஆன்மிக வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்த நாள், அந்த பொன்னான நாள்.

 

நான் 'ஆனாபானாசதி - பிரமிட் தியானம் ஆரம்பித்த நன்னாள்.

 

 

திருமதி. பாரதி

சேலம்

Go to top