" நீயும் பொறுமையாக இருந்து உழை "

 

வணக்கம். என் பெயர் வி.செல்வகணேசன். நான் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பாளையத்தில் வசித்து வருகிறேன். 2007ம் ஆண்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும்போது, அக்னிலிங்கம் எதிரில் இலவச தியானம் என்று சொல்லக் கேட்டு, பிரமிட்மாஸ்டர், திருமதி. சாந்தி அவர்கள் தியான முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் நான் தியானத்தை தொடரவில்லை.

 

அதன்பிறகு இரண்டு வருடம் கழித்து மீண்டும் அதே இடத்தில் சென்னையில் இருந்து வந்து தியானப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த பிரமிட் தியான மாஸ்டர் பிரேமா அவர்கள் தியான முறையைச் சொல்லிக் கொடுத்தார்கள். தியானத்தின் மகிமையை அப்போதுதான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

தினமும் அவரவர் வயதுக்கேற்றபடி, தியானம் செய்யச் சொன்னார். பிறகு, வீட்டில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தொடர்ந்து பிரமிட் (ஆனாபானசதி) தியானம் செய்து வருகிறேன். தற்சமயம் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் பெற்று தியானத்தின்மேல் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

ஒருநாள், நான் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். அச்சமயம், என் எதிரில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் தெரிந்தது. முதலில், நான் பயந்துவிட்டேன். அந்த உருவம், "பயப்பட வேண்டாம் நான் பத்ரிஜி தான்" என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின், என்னிடம், "ஆனாபானசதி தியானத்தை தொடர்ந்து செய்து வரவும். உங்களுடைய பிரச்சனைகள் யாவும் மடிந்து, மறையும்" என்று அறிவுறுத்திவிட்டு மறைந்து விட்டார். இந்த அனுபவம் என்னால் நம்ப இயலவில்லை. ஆனால் இது உண்மை.

 

நான் ஓவியராகப் பணிபுரிந்து வருகிறேன். தொடர்ந்து ஓவியம் வரைந்து வந்ததால் எனக்கு கழுத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது, சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த வேதனையை அனுபவித்துள்ளேன். மேலும் வலி காரணமாக தொழிலில் கவனம் செலுத்த முடியாததால் என் தொழிலில் பாதிப்படைந்தது. வீட்டில் எந்நேரமும் படுத்த வண்ணமாய் இருந்தேன்.

 

பல மருத்துவங்கள் செய்தும், எந்த பலனும் ஏற்படவில்லை. நான் செய்து கொண்ட அனைத்து மருத்துவ பரிசோதனை ஆவணங்கள், என்னிடம் இன்றும் உள்ளன. நான் தொடர்ந்து, 'ஆனாபானசதி தியானம்' செய்து வந்ததில் இப்பொழுது முழு குணம் அடைந்துள்ளேன். இந்த வேதனையிலிருந்து விடுதலை அடைந்த நான், என்னை தியானத்திற்கு அறிமுகப்படுத்திய திருமதி. சாந்தி மாஸ்டர், திருமதி. பிரேமா மாஸ்டர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்களுக்கும் எனது வாழ்நாள் முழுவதும் கடன்பட்டுள்ளேன்.

 

நான் யோகாசனம் பயின்றதில்லை. ஆனால் நான் தியானத்தில் அமரும்போது என்னை அறியாமலேயே, பலவித யோக முத்திரைகள் செய்கிறேன். அதன் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் சில தியான மாஸ்டர்களிடம் கேட்டதற்கு அவர்கள் நீங்கள் முற்பிறவியில் செய்த யோகாசனப் பயிற்சியாலும், தற்போது தியானத்தின் பலனாலும், உங்களால் அவ்வாறு செய்ய முடிகிறது என்று கூறினார்கள்.

 

நான் பொதுவாக, மிகுந்த முன் கோபம் உள்ளவன். ஒரு சமயம், என் மூத்தமகன் தியானத்தில் அமரவிடாமல் அடம் செய்ததால், நான் அவனை அடித்துவிட்டேன். பிறகு, நான் தியானம் செய்தபோது, கோபப்படக் கூடாது, அவசரப்படக் கூடாது, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், என் மகனிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறும் மற்றும் இதற்கு முன்பு நான் கோபப்பட்ட அனைவரிடத்தும் மன்னிப்பு கேட்குமாறும் எனக்கு அறிவுரை கூறப்பட்டது. நானும் அவ்வாறே என் மகனிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். மற்றவர்களிடம் தியானத்தின் மூலமாக மன்னிப்பு கேட்டேன். இப்போது எனக்கு முன்போல் கோபம் வருவதில்லை.

 

மேலும் என் தொழில் நலிவடைந்த சமயங்களில் அதற்கு தீர்வு காண தியானம் செய்தபோது, "ஒரு விஞ்ஞானி பல வருடங்கள் கடுமையாக உழைத்தால்தான் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டை உருவாக்க முடிகிறது. அதுபோல நீயும் பொறுமையாக இருந்து உழை" என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

ஒருநாள் என் உறவினர் வீட்டில் நான் தியானம் செய்தபோது, அவ்வீட்டில் ஒரு சித்தர் வந்து போவதால், அசைவ உணவு தயாரிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் அனைவரும் என்னைப் போலவே சைவ உணவிற்கு மாறிவிட்டார்கள்.

 

பலமுறை தியானத்தில் அமரும்போது உணர்ச்சி மிகுதியால், என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். என் மனைவிக்கும் அவ்வித அனுபவம் ஏற்பட்டதுண்டு. தியானம் செய்வதால் என் மனம் லேசாகிவிட்டது போல் உணர்கிறேன்.

 

எனக்கு தியானத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை சேலம் மாஸ்டர் திரு.சங்கர்லால் அவர்களிடம் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்வேன். அன்றிலிருந்து சேலம் நகரில் நடக்கும் அனைத்து தியான பயிற்சி முகாம்களிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

 

நானும், என் மனைவி, மக்களும் தொடர்ந்து தியானம் தினமும் செய்து பலனடைந்து வருகிறோம். இந்த தியானத்தை அனைவரும் கற்று, நன்மை பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.

 

 

வி.செல்வகணேசன்

இராசிபுரம்

Go to top