" எளிதான, இயற்கை மாறாத, பாதுகாப்பான தியானம் - ' ஆனாபானசதி ' "

 

என் அன்பு தியான தமிழக வாசகர்களுக்கு என் உளம் கனிந்த நமஸ்காரம், இத்தருணத்தில் "பிரம்மர்ஷி பத்ரிஜி" அவர்களுக்கு இதய பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த "தியான தமிழகம்" பத்திரிக்கை குழுமத்தினருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன்.

 

என் பெயர் சங்கர்லால் நான், எனது தாய், தந்தை, மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோருடன் சேலத்தில் வசித்து வருகிறேன்.

 

நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் (1985) "சைனஸ்" என்ற வியாதியால் பாதிக்கப்பட்டேன். இதன் பிறகு சுமார் 10 வருடங்ளுக்கு மேலாக சைனஸ் அலர்ஜியால் துன்புற்றுள்ளேன். மாதம் ஒருமுறை, இருமுறை, வாரம் இருமுறை என்று மருந்து உட்கொள்வது அதிகரிக்கத் தொடங்கியது. இச்சமயத்தில் தான், நான் மருந்துகள் இல்லாமல் இயற்கையான முறையில் உடலை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதுவே நான் ஆன்மிக மார்க்கத்திற்கு நுழைய காரணமாய் அமைந்தது.

 

ஜூன் 2002-ல் மைசூரில் வசிக்கும் என் தமக்கை திருமதி.கீதா அவர்கள் மூலம் எனக்கு தியானம் அறிமுகமானது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் எனக்கு தொலைபேசி மூலம் ஒரு தியான முறையை சொல்லிக் கொடுத்தார். எனக்கு இந்த தியானத்தின் பெயரும், இதை போதித்துக் கொண்டிருக்கும் குருவின் பெயரும் கூட தெரியாது. அன்று முதல் நாளே, நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். முதல் நாளே எனக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டன. ஒரு குருவும் அருகில் இல்லாமலே, எளிதாக இயற்கை மாறாத, பாதுகாப்பான தியானம் இந்த "ஆனாபானசதி" தியானம்தான் என்பது என் கருத்து. இன்று என் குடும்பத்தில் அனைவரும் தியானிகள்.

 

சைனஸால் நான் உடல் ரீதியாக துன்புற்ற காரணத்தை அறிய தியானத்தில் அமர்ந்தேன். நான் ஒரு முன் பிறவியில் 'அபுபக்கர்' என்ற பெயருடன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்திருந்ததை அறிந்தேன். அப்பிறவியில் நீர்வாழ் உயிரினங்களை அதிகம் உட்கொண்டதினால் இப்பிறவியில் 'சைனஸ்' தாக்கத்தால் துன்பம் அனுபவித்ததைத் தெரிந்து கொண்டேன். இந்த அனுபவத்தை இங்கு தெரிவிப்பதின் மூலம், அசைவ உணவு உட்கொள்பவர்கள், 'அஹிம்சை' மார்க்கத்திற்கு - சைவ உணவிற்கு நிச்சயம் மாறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

 

2002-ஆம் வருடம் ஆகஸ்ட்டு முதல்நாள், என் வீட்டிலேயே, மைசூரிலிருந்து படிப்பிற்காக சேலம் வந்திருந்த பிரமிட் மாஸ்டர் "தீபக்" தியான வகுப்பை ஆரம்பித்து வைத்தார். வாரம் ஒரு முறை தியானப்பயிற்சியை மேற்கொண்டோம்.

 

மேலும் பிரமிட் மாஸ்டர் திரு.ராஜன், மற்றும் திருமதி.கிரிஜாராஜன் அவர்களும் சேலம் வந்து எங்களுக்கு பல வகுப்புகளை நடத்திக் கொடுத்தார்கள், இத்தருணத்தில் சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம் துவங்கவும், அதன் சிறப்பான வளர்ச்சிக்கு உழைத்த திருமதி.கீதா, மாஸ்டர் தீபக், திரு.ராஜன், திருமதி.கிரிஜா ராஜன் மற்றும் சேலம் பிரமிட் மாஸ்டர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்று சேலத்தில் இரண்டு தியான மையங்கள் செயல்பட்டுக் கொன்டிருக்கின்றன. சேலம் பிரமிட் ஆன்மிக மன்றம், பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு என்று தியானம் மற்றும் அஹிம்சையை போதிப்பதை தலையாய கடமையாக மேற்கொண்டு வருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கெறேன்.

 

இப்புவி அமைதி பெற தியானம் கற்போம். தியானம் கற்பிப்போம். எங்கும் அஹிம்சை மலரட்டும். அன்பு நிலவட்டும். ஆனந்தம் நிரம்பட்டும்.

 

 

G.L. சங்கர்லால்

சேலம்

Go to top