" மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் மனம் அமைதியுறும் "

 

எனது பெயர் சூரியகுமாரி. நான் சென்னை முகப்பேர் மேற்கில் வசித்து வருகிறேன். என் தியான அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

என் 16 வயதில் "மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் மனம் அமைதியுறும். இதுதான் தியானம்" என்று ஒருவர் கற்றுத் தந்தார். நானும் அந்த விதமான தியானத்தை அவ்வப்பொழுது செய்து வந்தேன். ஆனால் எனக்குள் தியானம் செய்வதால் பலன்கள் பல கிடைக்கும் என்று தோன்றி வந்தது.

 

23 வயதில் திருமணம் நடந்து பாண்டிச்சேரியில் வசித்து வந்தேன். அன்னை சமாதிக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ளவர்களிடம் விசாரிப்பேன். தியானம் செய்தால் மனம் அமைதி அடையும் என்ற பதில் மட்டும் எனக்கு கிடைத்தது.

 

2001க்கு பின், சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அந்த சமயத்தில், நாள்தோறும் சளி தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டேன். வாரம் ஒரு முறை மருத்துவர் என்று இரண்டு வருடம் இப்படியே போனது. அதனாலேயே பலவீனம், மனச்சோர்வு, பயம், இயலாமை, மேலும் எதிர்மறை எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டேன். வாழ்வு இனிமேல் இப்படித்தான் கழியப்போகிறது என்ற நிராசையுடன் வாழ்வு நகர்ந்தது.

 

பல அமைப்புகளில் தியானப்பயிற்சி ஒரு வாரம் நடக்கும். மூன்று நாட்கள் நடக்கிறது என்று விளம்பரப் படுத்தும் பொழுது அதைப்பற்றி விசாரித்தால் ரூ.500/-, ரூ.1000/- என்று அதற்கான கட்டணத்தை கூறினார்கள். யாராவது இலவசமாக தியானம் கற்பிப்பார்களா? என்று என் தேடல் தொடங்கியது.

 

2006-ம் வருடம் ஒரு அமைப்பில் 3 நாள் பயிற்சிக்கு ரூ.1000/- செலுத்தி அங்கு போய் கற்றுக் கொண்டேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை.

 

என் உடல் நிலையும் மேற்கூறியபடியே மிக பலவீனமாக இருந்து வந்தது. தண்ணீரில் வேலை செய்வது என்றாலே எனக்கு பயமாக இருந்தது.

 

எங்கள் எதிர்வீட்டில் வசிக்கும் ரமாதேவி அவர்கள் இலவசமாக ஒரு அமைப்பு தியானம் கற்பிக்கிறார்கள். ஏற்பாடு செய்யலாமா? என்றார்கள். நானும் சரியென்று ஏற்பாடு செய்தோம்.

 

முதல்நாள் வகுப்பு திருமதி.குமுதா அவர்கள் எடுத்தார்கள். தியானத்தின் பயன்கள் அவர்கள் கூறியதைக் கேட்டு மிக வியப்புற்றேன்.

 

தினமும் அரைமணி நேரம் தியானம் செய்தேன். பலருக்கும் விளம்பர நோட்டீஸ் கொடுத்து தியானம் செய்யுங்கள் என்று கூறிவந்தேன். என் சளித் தொல்லையிலிருந்து சிறிதளவு மட்டுமே குணம் கிடைத்தது. மேற்கூறிய பிரச்சனைகளில் சிறிதளவு மட்டுமே முன்னேற்றம் இருந்தது. சுமார் ஒரு வருடம் இப்படியே கழிந்தது.

 

அனைத்து பிரமிட் மாஸ்டர்களிடமும் அவர்கள் சென்னை வரும் பொழுது எல்லாம் ஏன் நான் மட்டும் முழுமையான முன்னேற்றம் அடையவில்லை என்ற கேள்வி எழுப்பினேன். அவர்களும் என்னிடம் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். சிறு வயது முதலே அசைவம் சாப்பிட்டு வந்தேன். அதைத் தவிர்த்து விடுமாறும், எனது தியானத்தின் நேரத்தை அதிகப்படுத்துமாறும் கூறினார்கள்.

 

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினேன். தியானத்திற்கான நேரத்தை அதிகப்படுத்தி கொள்ளத்தெரியவில்லை. அதன்பின் குமுதா மற்றும் ஜெகதீஷ் அவர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு 3 நாள் வகுப்பிற்கு வருமாறு கூறினார்கள். அதுவரை நான் எந்த வகுப்புகளிலும் கலந்து கொண்டதில்லை.

 

பாண்டிச்சேரியில் 3 நாளும் பெரும்பொழுது தியானத்திலேயே இருந்தேன். அந்த பிரமிடின் கீழ் என்னால் தியானம் தொடர்ந்து நீண்ட நேரம் செய்ய முடிந்தது. நான் சென்னை திரும்பியதும் எனது அன்றாட வாழ்க்கையில் வேலைகள் முடிந்தவுடன் தியானத்தில் உட்கார வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.

 

பாண்டிச்சேரியில் 3 நாள் வகுப்பிற்கு பிறகுதான் எனக்கு நிறைய மாறுதல்கள் ஏற்பட்டது. என் எண்ணங்களுக்கு சக்தி கூடியது. எனது எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டது. மாத்திரையே எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொள்ளமுடிந்தது. என் சளித்தொல்லை மற்றும் மேற்கூறிய விஷயங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டேன். என் மகனையும் அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினேன். எங்கள் வீட்டில் அசைவம் சமைக்கக் கூடாது என முடிவும் எடிக்க முடிந்தது.

 

“பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டி" நடத்தும் வகுப்புகளுக்கு செல்வதால் என்ன பயன் இருக்கப்போகிறது என்ற என் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து மாற்றமடைந்திருப்பது மூலமே அனைவரும் வியப்புறும் வண்ணம் என் பலவீனங்கள் மறைந்து இப்போது உறுதியாக இருக்கிறேன்.

 

நான் தியான பிரச்சாரம் இப்பொழுது செய்ய ஆரம்பித்து விட்டேன். எங்கள் பகுதியில் தியான வகுப்புகளும் எடுக்கிறேன்.

 

பத்ரிஜி அவர்கள் இலவசமாக தியானத்தை கற்பிக்கச்சொல்கிறார். கற்றுக்கொண்ட தியானத்தை மற்றவர்களுக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது வகுப்புகளும் இலவசமாக எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் "தியான ஜகத்"துக்கு வழி வகுக்கிறார், பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள்.

 

எந்த அமைப்பு இப்படி போதிக்கிறது? "தீட்சை வேண்டுமா? இவ்வளவு கட்டணம் செலுத்துங்கள்" என்று ஒவ்வொருவரிடமும் பணம் தான் பிரதானம் என்று கூறப்படுகிறதா? முற்றிலும் இதிலிருந்தெல்லாம் மாறுபட்ட இந்த "பிரமிட் ஸ்பிரிச்சுவல் சொஸைட்டியில்" நானும் ஒரு அங்கம் என்பதில் பெருமையடைகிறேன்.

 

எனது ஐயங்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கும் திருமதி.கிரிஜாராஜன், திரு.ஜெகதீஷ் குடும்பத்தினர். திருமதி.குமுதா, திருமதி.ஸ்வர்ணஸ்ரீ, திரு.வெங்கடாசலம் குடும்பம் மற்றும் திரு.தமிழ்மணி ஆகியோர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனக்கு இப்படிப்பட்ட தியானத்தை அறிமுகப்படுத்திய திருமதி.ரமாதேவி அவர்களுக்கும் மிக்க நன்றி.

 

சிறு வயது முதல் புத்தரின் சில போதனைகளை கடைபிடிக்கச் செய்த என் தந்தைக்கும் தாய்க்கும் மிக்க நன்றி.

 

எனக்கு பல விதங்களிலும் துணையாகவும் ஊக்கமும் அளித்த என் கணவருக்கும் மற்றும் என் மாமியாருக்கும் நன்றி.

 

 

திருமதி.சூரியகுமாரி

சென்னை

Go to top