" கோபத்தை கட்டுப்படுத்தும் தியானம் "

 

என் பெயர் திருமதி.சொப்னா ஹரி. என்னுடைய ஊர் சென்னை. 2008 நவம்பரில் முதன்முதலாக தியானம் செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய முதல் தியான வகுப்பில் சீனியர் மாஸ்டராகிய திரு.பிரேம்நாத் சார் அவர்களின் சொற்பொழிவை, நெற்குன்றத்தில் உள்ள திருமதி. பிரசாந்தி சந்திரசேகர் அவர்களின் இல்லத்தில் கேட்டேன். அந்த வகுப்பில் பிரேம்நாத் சார், "மருந்தில்லாமல் நம் உடலின் நோய்களை குணப்படுத்த முடியும், வாழ்க்கையில் எது வந்தாலும் நம் நல்லதுக்குத்தான்" என்றும் "நாம் கற்றுக்கொண்ட தியானத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.

 

அந்த வகுப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அன்று எனக்கு தியானத்தில் உடல் வலியை உணர்ந்தேன். நான் தையல் வேலை செய்கிறபடியால் என்னை நிறைய பெண்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கும், மற்றும் எனக்கு தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், அனைவருக்கும் தியானத்தைப் பற்றிக் கூறி, தியானம் செய்வதற்காக என் வீட்டின் அருகிலேயே உள்ள "பிரமிட் வீடான" நெற்குன்றம், திருமதி.பிரசாந்தி சந்திரசேகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். இதன் மூலம் அநேகர் பயன் அடைந்துள்ளனர். பிரமிட்டின் சக்தியை அனைவரும் பெறுகின்றனர். தியானத்திற்கு முன்னர் எனக்குக் கோபம் மற்றும் டென்ஷன் இருக்கும். யாராவது தவறாக எதாவது சொன்னால், கோபமாக பதில் கூறிவிடுவேன். இதனால், என்னை மற்றவர்கள், "கோபக்காரி" என்றனர். தியானத்திற்குப்பின் என்னுடைய கோபம் குறைந்துவிட்டது. சின்ன நோய்கள் ஏற்பட்டாலும் தியானத்தின் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடிகிறது.

 

முதலில் நான் மட்டும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். பின்னர், சங்கல்பம் செய்து என் கணவரையும் தியானம் செய்ய வைத்தேன். அன்று முதல் இன்றுவரை என் வீட்டில் அனைவரும் விடாமல் தியானம் செய்து வருகிறோம். முன்பெல்லாம் எங்களுக்குள் சில சச்சரவுகள் வரும். இப்போழுது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், சந்தோஷமாக வாழ்கிறோம். முன்னர் என் கணவர் காலை 9 மணிக்குமுன் எழமாட்டார். ஆனால் இப்பொழுது காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தொடர்ந்து 2 மணிநேரம் தியானம் செய்கிறார். முன்பு சீக்கிரத்திலேயே சோர்ந்து விடுவேன். தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் மிகவும் சுறுசுறுப்பாக, கோபம் இல்லாமல் வேலை செய்கிறேன். இப்பொழுது என் கணவரும் அனுசரணையாக இருக்கிறார்.

 

நானும், என் கணவரும் அசைவம் முன்பு விரும்பி உண்பவர்கள். தியானத்திற்கு பின்னர்தான், 'ஒரு மனிதன் மற்ற விலங்குகளைக் கொன்று உண்ணக்கூடாது' என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இப்பொழுது நாங்களிருவரும் சைவ உணவிற்கு மாறிவிட்டோம். அசைவம் சமைத்த பாத்திரங்களையும் மாற்றிவிட்டோம். அசைவத்தை அகற்றியதுமே வாழ்க்கை மிகவும் அமைதியாக மலர்ந்து விட்டது. என் கணவரின் உடல் ஆரோக்யமும் மேம்பட்டிருக்கிறது.

 

முன்பெல்லாம் என்னை எங்கும் அழைத்துச் செல்லமாட்டார். இப்பொழுது தியான யக்ஞம் நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் (ஸ்ரீசைலம், காஞ்சி, பெங்களூர் பிரமிட்) அழைத்துச் செல்கிறார். எனக்கு ஏதாவது சந்தேகங்கள் வந்தால், மாஸ்டர்களின் மூலமாக அவற்றிற்கு விடை காண முடிகிறது. பெளர்ணமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததும் குருஜி, பெளர்ணமி பற்றிய புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். சொசைட்டியில் உள்ள புத்தகங்கள், 'சிடிக்கள்' மூலமாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இருமாத இதழான 'பிரமிட் தியான தமிழகம்' படிக்கின்றேன். வீட்டில் 2'x2' பிரமிட் வைத்து தியானம் செய்கிறோம்.

 

என் அக்கா மகள் வீட்டில் படுத்துறங்கியதில், உஷ்ணம் காரணமாக வேனல் கட்டிகள் ஏற்பட்டன. 4 நாட்கள் எங்கள் வீட்டின், பிரமிடின் கீழ் படுத்ததும் கொப்பளங்கள் மறைந்துவிட்டன. பிரமிட்டின் அடியில் வைத்த தக்காளி அதிக நாட்கள் கெடாமல் இருக்கின்றன. ஒருமுறை ஒரு மணி நேர பெளர்ணமி தியானம், ஒரு நிமிடத்தில் முடிந்தது போல் இருந்தது. எனக்குக் கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைக்கின்றன. அனாவசிய கோரிக்கைகள் மனதில் எழுவது கிடையாது. நான் அனாவசியமாக மற்றவர்களிடம் பேசுவது நின்றுவிட்டது.

 

காஞ்சிபுரம் தியான யக்ஞத்தில் குருஜியின் 'ஆரா'வைப் பார்த்தேன். எல்லோருக்கும் "தியானம்" சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றே என்னுள் ஆவல் எழும். ஆகவே, அனைவரும் என்னைப் போலவே, தியானம் செய்து அவரவர்கள் விரும்புகிற பலன்களைப் பெற இயலும்.

 

 

திருமதி. சொப்னா ஹரி

சென்னை

Go to top