" தியானத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை "

 

என்னுடைய பெயர் திருமதி. உஷா சந்திரா. நான் தியானத்தை மேற்கொள்வதற்கு முக்கிய காரணம், என் தோழி கீதா மேடம் தான். நான்கு வருடங்களாக என் கணவர் இராமகிருஷ்ணா மிசினின் தியானத்தை மேற்கொள்கிறார். என்னையும் செய்ய வற்புறுத்தினார். இரண்டு பேருமே தியானத்திற்கு சென்றுவிட்டால் பிள்ளைகளை யார் கவனிப்பது? என்று காரணம் கூறி, நான் அங்கு செல்லவில்லை.

 

பின்னர் 2007 அக்டோபரில் நவராத்திரியின் போது என் தோழி விஜயலட்சுமி மூலமாக பிரமிட் மாஸ்டர் கீதா மேடத்தின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தியானம் கற்றுக்கொடுப்பார்கள் என தெரியும். ஆனால் நான் அதுபற்றி அவர்களிடம் கேட்கவில்லை.

 

2008 ஜூலையில் கீதா மேடத்தின் வீட்டிற்கு தியான வகுப்புக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். எனக்கு காய்ச்சல் இருந்தபடியால் நான் செல்லவேண்டாம் என தவிர்த்தேன். ஆனால் அவர், 'நீங்கள் கட்டாயம் வரவேண்டும், உடல்நிலை முடியாவிட்டால் இங்கேயே படுத்துக்கொள்ளுங்கள். அங்கு கூறப்படுபடுவதைக் கேட்கமட்டுமாவது செய்யுங்கள்' என்றார். நானும் கிளம்பிச் சென்றேன். சென்னை ஜெகதீஷ் மாஸ்டர் தியானம் பற்றி கூறி 20 நிமிடம் தியானம் செய்வித்தார். அப்பொழுது கூட எனக்கு விருப்பம் வரவில்லை. சரி, மாஸ்டர் சொன்னாரே என்பதற்காக தியானம் 10 நிமிடங்கள் தான் செய்தேன். ஆனால் எனக்கு 1 மணி நேரம் செய்வதுபோல் தோன்றிற்று. 15 நாட்களுக்குப் பிறகு பிரமிட் மாஸ்டர் மணியின் வகுப்பு கீதா மேடம் வீட்டில் நடந்தது. அவர் ஆன்மா பற்றியும் தியான அற்புதங்களைப் பற்றியும் கூறினார். அப்பொழுதுதான் எனக்கு, "தியானத்தில் எதுவோ இருக்கின்றது. நாமும் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தியான நேரத்தின் அளவை கூட்டிக் கொண்டே சென்றேன். ஒருமுறை தியானத்தில் கீதா மேடம் துர்கா தேவியாக, விஜயலட்சுமி லட்சுமி தேவியாக, துர்கா, சரஸ்வதியாக தென்பட்டார்கள். அந்த நாள் மிகவும் ஆனந்தமாக இருந்தது. நமக்குள் ஆண்டவர் இருக்கிறார் என்ற உண்மை புரிந்தது. இது முதல் அனுபவம். அன்றிலிருந்து விடாமல், தியானத்தை ஒழுங்காகச் செய்கிறேன்.

 

'ஆனாபானசதி' தியானத்தை அனுதினமும் செய்ய ஆரம்பித்தபின் குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து சந்தோஷமாக தியானம் செய்யலாம் என புரிந்து கொண்டேன்.

 

2008 நவம்பர் 25 பத்ரிஜி, கீதா மேடம் வீட்டிற்கு வந்தார். நான் அவரை சந்திப்பது அது தான் முதல் முறை. தியானம் தொடர்ச்சியாக ஆரம்பித்த நான்கு மாதங்களில், குருஜியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் பத்ரிஜி எங்களிடம், 'ஜெகதீஷ் மாஸ்டருக்கு 'சிங்கமலை' பட்டமளிப்பு விழா இருக்கிறது, கண்டிப்பாக வரவேண்டும், அப்படி வரவில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு சுனாமி வரும்' என (விளையாட்டாகக்) கூறினார். நாங்களும் 'கண்டிப்பாக வருவோம்' எனக் கூறினோம். நாங்கள் சில பேர் சேர்ந்து அங்கு செல்லத் திட்டமிட்டோம். ஆனால், அச்சமயத்தில் புயலுடன் கூடிய மழை பெய்ததால் திரும்பி வர முடியாது என்று நாங்கள் செல்லவில்லை. 3 நாட்கள் தண்ணீர் இல்லை, மின்சாரமும் இல்லை, 4வது நாள் நான் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது காலனி முழுவதும் தண்ணீராக கடல் போல் காட்சியளித்தது. அப்பொழுதுதான் பத்ரிஜி, 'சுனாமி மழைவரும்' என்பதை முன்கூட்டியே தெரிவித்தது அதிசயமாக இருந்தது. விளையாட்டாகக் கூறினாலும் அவர் 'வாக்கு' பலித்து விட்டது. அவர் வார்த்தையில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அறிந்து பூரிப்படைந்தோம்.

 

2009 மார்ச் மாதம் கீதா மேடம் வீட்டில் 40 நாட்கள் அகண்ட தியானம் செய்தோம். 41-வது நாள் எனக்கு தியானத்தில் பத்ரிஜி அவர்கள் கீதா மேடத்தின் காதில் ஏதோ கூறுவது போல் இருந்தது. ஆனால் அது என்ன என்று தெரியவில்லை. பின், கீதா மேடம், இராமாயணத்தைப் பற்றி தியானத்திலேயே கூறினார். பின்னர்தான் தெரிந்தது, தியானத்தில் பத்ரிஜி கீதா மேடத்திற்கு இராமாயணக் கதையை அவர் காதில் கூறினார் என்று. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு முறை தியானத்தில் 10 வருடங்களுக்கு முன் இறந்த என் தாயைக் கண்டு பேசியது, எனக்கு ஆனந்தத்தையும், ஆச்சர்யத்தையும் அளித்தது.

 

ஒரு வருடத்திற்கு முன் என் முழு உடல் சோதனையின் போது கர்ப்பப்பையில் 'அலர்ஜி' இருப்பதாக கூறினார்கள். ரிப்போர்ட்டை பார்த்த ஒரு டாக்டர் கர்ப்பபையை எடுக்க வேண்டும் என்றார். இன்னொரு டாக்டர் பிரச்சனை இல்லை எடுக்க வேண்டாம் என்றார். பின்னர் நான் டாக்டரிடம் செல்லவில்லை. ஆறு மாத தியானத்திற்கு பின், திரும்பவும் டாக்டரிடம் பரிசோதனை செய்த ரிப்போர்ட்டில், அலர்ஜி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. என்ன விந்தை.

 

தியானத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், தியானத்தால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது. நமக்கு கை, கால் இல்லையென்றால் கூட வாழலாம். கண் இல்லையென்றால்கூட வாழலாம். வாய் பேசவில்லை என்றால் கூட வாழலாம், ஆனால் சுவாசம் இல்லாமல் வாழ முடியாது அல்லவா? சுவாசம் தான் அந்தரங்க குரு அந்த சுவாசத்தின் மீது கவனம் வைப்பதே தியானம்.

 

தியானம் "சர்வ ரோக நிவாரணி" நான்கு மணி நேர நடைப்பயிற்சி உடற்பயிற்சி ஒரு மணிநேர தியானத்திற்கு சமம். "அப்போ தீபோ பவ" என்று புத்தர் கூறியுள்ளார். அதாவது நம்முடைய அகவிளக்கை நாம்தான் ஏற்றவேண்டும். இது தியானத்தின் மூலம்தான் சாத்தியம்.

 

திருமதி. உஷா சந்திரா

மும்பை

Go to top